அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான, முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 2021-22, 2022-23-ஆம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை முதலமைச்சர் வழங்கினார்.
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகள் – ஆறு கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 இலட்சம் மற்றும் கேடயம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (12.8.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட குளூர், நி.பஞ்சம்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம், மேல்மருவத்தூர் மற்றும் அரியனேந்தல் ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத் தொகையாக தலா 15 இலட்சம் ரூபாயும் கேடயமும் வழங்கினார்.
2021-22ஆம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், “முன்மாதிரி கிராம விருது” தோற்றுவிக்கப்பட்டு, மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு “முன்மாதிரி கிராம விருது” வழங்கி கௌரவிக்கப்படுவதுடன், இவ்விருதிற்கான கேடயமும், தலா 7.5 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும், மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் “முன்மாதிரி கிராம விருது’ வழங்கி அதற்கான கேடயமும், தலா 15 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளூர் கிராம ஊராட்சி,
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி
மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2022-23ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகளுக்கு
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி,
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி
மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியனேந்தல் கிராம ஊராட்சி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆறு கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாநில அளவிலான முன்மாதிரி கிராம விருதுகளும், பரிசுத் தொகையாக தலா 15 இலட்சம் ரூபாய் மற்றும் கேடயமும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் திரு.எம்.எஸ். பிரசாந்த், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.