சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

அட்மின் மீடியா

0

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில்  30 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு இல்லாத ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முதல்வரிடம் ஆலோசித்து விட்டு அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்தார். 

ஆனால், முறையான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்தனர்.இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது,

பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர் அவர்கள் ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.12,500 ஊதியமாக வழங்கப்படும். 

ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். 

தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் 

சம வேலைக்கு சம ஊதியம் எனும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். 

பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேற்று அறிவித்திருந்தார்.

மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுவதால் அவர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டு இருந்தார்.

இந்நிலைலியில் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்த நிலையில், காலையில் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் குழந்தைகளுடன் போராட்ட களத்தில் பங்கேற்ற நிலையில், தற்போது சமுதாய நலக்கூடங்களில் உள்ளனர்.