அட்மின் மீடியா
0
- TTF வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும்.
- விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் அவரது யூடியூப் சேனலையும் மூடக்க வேண்டும்
- ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் கருத்து
- 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு உடையால் உயிர் தப்பியுள்ளார்.
- இவரை பின்தொடரும் பலர் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்
- எனவே அவருக்கு ஜாமின் அளிக்கக்கூடாது என காவல்துறை கடும் எதிர்ப்பு
செப்டம்பர் 18 ம் தேதி சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற வைகுந்தவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
மேலும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில் கால்நடைகள் சாலையைக் கடந்ததால் திடீரென பிரேக் போட்டதில் வாகனத்தின் முன்சக்கரம் தூக்கியது ஒருவேளை நான் பிரேக் போடாமல் இருந்தால், கால்நடைகள் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
மேலும் நான் விபத்தில் காயம் அடைந்துள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது நான் ஒரு அப்பாவி. நான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.என கூறி இருந்தார்
இந்த மனு மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணுக்கு வந்தது.
அப்போது வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்தில் வலது கையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, காவல்துறை தரப்பில், வாசன் தன்னை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் 40 லட்சம் ரசிகர்களுக்காக இது போன்று செய்துள்ளார்.
இது போன்ற சாகசங்களை செய்ய வாசன் 2 முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கவச உடை மற்றும்20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை வாங்கியுள்ளார்.
இவரின் செயலால் கவரப்படும் இளைஞர்களிடையே அதிவேகமாக சென்று வழிப்பறியில் ஈடுபடும் எண்ணம் ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதற்காக ஜாமீன் வழங்கி விட முடியாது. ஜாமீன் வேண்டுமென்றால் முதலில் பைக்கை எரித்து விட்டு யூடியூப் பக்கத்தை நிரந்தரமாக முடக்கிவிட்டு நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசனின் வலது கையில் உள்ள காயத்தை சிறைத்துறை ஆய்வு செய்து தகுந்த முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.