தரமற்ற தார் சாலை என சேதப்படுத்தியவர்கள் மீது சட்டபடி நடவிக்கை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு





அட்மின் மீடியா

0

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் தரகம்பட்டி பகுதியில் இருந்து வீரசிங்கம்பட்டி வரை வீரப்பூர் செல்லும் சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இருந்த சாலை சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டார். சுமார் 4 கிலோ மீட்டர் தார் சாலை அமைக்க ரூ. 1.12 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன. 

அனைத்து பணிகளும் முடிவடைந்து நேற்று இந்த தார்ச்சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஆனால் முறையாக தரமாக தார்ச்சாலை போடாமல் ஏற்கனவே இருந்த தார்ச்சாலையை பெயர்க்காமல் அதன் மேலேயே போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தரமற்ற வகையில், சாலை போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கைகளால் கிண்டினால் கூட அடை போல உருண்டு சுருளும் மோசமான நிலையில் இந்த சாலை உள்ளது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார்ச் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள், ரோட்டை கையால் அள்ளிக் காட்டி வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வந்தது

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பட்டியில் இரண்டு ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தரமற்ற சாலை அமைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “தவறான புகார்‌ பரப்பியதன்‌ அடிப்படையில்‌ உடனடியாக விரசிங்கம்பட்டி தார்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.த.பிரபுசங்கர்‌ சாலையின்‌ தரம்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்‌, கரூர்‌ மாவட்டம்‌, கடவூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌, மாண்புமிகு. முதலமைச்சரின்‌ கிராம சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தரகம்பட்டி முதல்‌ விரசிங்கம்பட்டி வரை உள்ள தார்சாலையை புனரமைத்தல்‌ பணி மேற்கொள்ள செயல்முறைகளில்‌ நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள்‌ கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில்‌ குறைந்த விலைப்புள்ளி அளித்த M/s Chinnammal Enterprises, vaiyampatty என்ற நிறுவனத்திற்கு செயல்முறைகளின்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

மேற்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டதைத்‌ தொடர்ந்து பேட்ச்‌ ஒர்க்‌ முடித்து (06-10.2023) வெள்ளிக்‌ கிழமை காலை 10.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை 1050 மீட்டர்‌ மட்டும்‌ தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு முழுமையாக செட்‌ ஆவதற்கு 48 மணி நேரம்‌ முதல்‌ 72 மணி நேரம்‌ வரை ஆகக்கூடிய சூழ்நிலையில்‌, வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில்‌ திருமதி.ஈஸ்வரி என்பவரது வீட்டின்‌ அருகில்‌ இறுதியாக தார்சாலை மாலை 6.00 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில்‌ அந்த பகுதியை சேர்ந்த சிலர்‌ தார்சாலையை சேதப்படுத்தியுள்ளனர்‌. 

மற்றும்‌ இரண்டு ஒப்பந்தாரர்கள்‌. இடையே ஏற்பட்ட பிரச்சினையால்‌ சமூக ஊடகங்கள்‌ மற்றும்‌ வலைதளங்களில்‌ தவறான விடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார்சாலை தரம்‌ இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும்‌, அரசிற்கும்‌ அவப்பெயரை ஏற்படுத்தினர்‌.

சாலையின்‌ தரம்‌ குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில்‌ சேதப்படுத்திய இடத்திற்கு அருகில்‌, நீளம்‌+ அகலம்‌ 1௦ செ.மீ + 1௦ செ.மீ. மற்றும்‌ ஆழம்‌ 3.௦ செ.மீ. என்ற அளவில்‌ வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம்‌ 3.5 செ.மீ. இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார்சாலையின்‌ கனம்‌ 0.5 செ.மீ. இருந்தது தெரியவந்தது. வெட்டி எடுக்கப்பட்ட தார்சாலையின்‌ மூலப்பொருட்கள்‌ (தார்‌ மற்றும்‌ ஜல்லி) வெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின்‌ அளவு மற்றும்‌ ஜல்லி ஆகியவற்றின்‌ அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில்‌ 5.4% தார்‌ இருக்க வேண்டிய இடத்தில்‌ 5.5% இருந்தது ஆய்வில்‌ தெரியவந்தது.

இச்சாலையின்‌ தரம்‌ மேற்படி மூலப்பொருட்கள்‌ தர ஆய்வு செய்யப்பட்டதின்‌ அடிப்படையில்‌, சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள்‌ மீது காவல்‌ துறை முலம்‌ தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.