Sept 17, 2023
அட்மின் மீடியா
0
பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்ற கெமிக்கல் மூலம் தயார்செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.
திருநெல்வேலியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நபர் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்ற கெமிக்கல் மூலம் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக தயார்செய்துள்ளார்
இந்நிலையில் , மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் ரசாயனம் கொண்டு தயாரிக்கபட்ட சிலைகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளதாகவும், அந்த தடையை நீக்கி விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்குமாறும் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை செய்து, மனுதாரர் தயாரித்த சிலைகளை விற்பனை செய்யலாம். ஆனால், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்து இருந்தார்
இந்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனி நீதிபதியின் உத்தரவு மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிக்கு எதிராக உள்ளது. விநாயகர் சிலைகள் இயற்கையான களிமண்ணால் செய்திருக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய நச்சு வேதிப்பொருட்கள் அடங்கிய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படக்கூடாது, அதை தயார் செய்வதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தார்.
மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல் படியும் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் கெமிக்கல் விநாயகர் சிலைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை செய்தது சரிதான் என்றும் ஸ்.எஸ்.சுந்தர் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.